மீண்டும் தள்ளிப்போகுதா சீயான் விக்ரமின் தங்கலான் ரிலீஸ்?...


நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் தங்கலான். இந்தப் படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளார். படம் சுதந்திர போராட்ட காலகட்டத்தையொட்டிய கதைக்களத்தில் உருவாகியுள்ளது. விக்ரம் இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் முதியவர் மற்றும் இளைஞர் என இருவேறு கேரக்டர்களில் நடித்துள்ளார். படத்தின் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இந்த ஆண்டிலேயே தங்கலான் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், பொங்கலையும் கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினக் கொண்டாட்டமாக படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தின் சூட்டிங் கடந்த ஜூலை மாதத்திலேயே நிறைவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது படத்தில் விக்ரமின் சில காட்சிகள் திருப்தி தராத நிலையில் அதை மீண்டும் சூட் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


இதையொட்டி தற்போது சூட்டிங்கையும் போஸ்ட் புரொடக்ஷனையும் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பீரியட் படம் என்பதால் சில காட்சிகளுக்கும் அதிகமான மெனக்கெடலை செய்ய வேண்டியுள்ளதால், ரீ-சூட் எடுக்கப்பட்டால் அதற்கான நேரம் அதிகமாக தேவைப்படும் என்பதால் தற்போது ரிலீஸ் குறிப்பிட்ட தேதியில் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது

முன்னதாக விக்ரமின் கோப்ரா படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், பொன்னியின் செல்வன் 2 படமும் மல்ட்டி ஸ்டாரர் படமாக வெளியாகியது. இந்நிலையில் விக்ரமின் தங்கலான் படம் அவருக்கு சிறப்பான கம்பேக்காக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நவம்பரிலேயே ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட துருவ நட்சத்திரம் படமும் இன்னும் ரிலீசாகாமல் பல சிக்கல்களில் தவித்து வருகிறது.


இதனிடையே தற்போது ரீ-சூட் காரணமாக தங்கலான் படத்தின் ரிலீசும் தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது விக்ரம் ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ரீ சூட்டை விரைவில் நிறைவு செய்து குறிப்பிட்ட காலத்தில் படத்தை நிறைவு செய்யவும் வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். எதுவாக இருந்தபோதிலும் இன்னும் சில தினங்களில் இதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Post a Comment

புதியது பழையவை